நீங்கள் முதிர்ச்சி அடைந்த மனிதரா? (7 signs of a Matured person)

நீங்கள் முதிர்ச்சி அடைந்த மனிதரா? (7 signs of a Matured person)

நீங்கள் முதிர்ச்சி அடைந்த மனிதரா? (7 signs of a Matured person)

நீங்கள் முதிர்ச்சி அடைந்த மனிதரா? (7 signs of a Matured person)

  • Jeya Kumar

  • 4 minute read

வயதாகும் அனைவருமே முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு வயதானாலும், முதிராமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வோர்தான் அனேகம். முதிர்ச்சியை அறிவோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் தவறையும் பலர் செய்வதுண்டு. ஆனால் அது நமது உணர்வு நிலையில் நமக்கு இருக்கும் கட்டுப்பாட்டையே குறிக்கிறது.

எப்படி ஒருவர் தனது அறிவை மேம்படுத்திக் கொள்ளும்போது அறிவாளி என அறியப்படுகிறாரோ, அதே போல் ஒருவர் தனது உணர்வுகளைச் சரியான விதத்தில் கையாளும் நுணுக்கங்களில் தேறும்போது, அவர் முதிர்ச்சி அடைந்தவராகப் பார்க்கப்படுகிறார்.

முதிர்ச்சி ஏன் தேவை?

முதிர்ச்சி அடைகையில் ஒருவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களோடு நல்லுறவோடு இருக்க முடிகிறது. சவாலான சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் பக்குவமாக பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடிகிறது. எந்தச் சூழலும் யாரின் நடத்தையும் அவரை அமைதியிழக்கச் செய்வதில்லை. அதனால் முதிர்ந்த ஒருத்தர் வாழ்வில் எப்போதும் சமநிலையில் இருப்பதைக் காண முடியும்.

எல்லோர் மனத்திலும் தான் முதிர்ச்சி அடைந்து விட்டதாக ஒரு எண்ணம் தோன்றுவது இயல்புதான். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை. நீங்கள் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்த ஒருவர்தான் என்றால் கீழ்க்காணும் இந்தக் குணங்கள் உங்களிடம் கட்டாயம் இருக்கும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

1. வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள்

பலரும் இன்று மிகச் சிறிய வயதிலேயே தங்களுக்கான சில கொள்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அந்தக் கொள்கையில் சில தவறுகள் இருப்பது தெரியும்போதும் அதிலிருந்து வெளிவரவோ அதனை மாற்றிக் கொள்ளவோ மாட்டார்கள். எனக்குத் தெரிந்த தோழி நல்ல புத்திசாலி, தீர்க்கமானவர். நல்ல பல பண்புகளை உடையவர். ஆனால் அவர் கொண்டிருக்கும் கொள்கைகள் பற்றிய பேச்சு வரும்போது, எதிரில் இருப்பவர் என்ன கூறினாலும், அதனைச் சட்டை செய்யாமல் நிர்தாட்சண்யமின்றி புறந்தள்ளி விடுவார். அவர்கள் கூற்றில் சிறிதளவேனும் உண்மை இருக்கலாம் என்கிற சிந்தனைக்கே இடமளிக்க மாட்டார். இது போலத்தான் பலரும் “நான் புடித்த முயலுக்கு மூணு கால்” என்று பிடிவாதம் பிடிப்பார்கள். இது அவர்களின் முதிராத மனத்தையே காட்டுகிறது.

ஆனால் முதிர்ச்சி பெற்றவர்கள், தங்கள் கொள்கையில் நம்பிக்கையோடு இருந்தாலும், அடுத்தவரின் கருத்தையும் விவாதம் செய்யும் நோக்கில் இல்லாமல் திறந்த மனத்தோடு காது கொடுத்துக் கேட்பார்கள். அந்தக் கருத்து சரியாக இருப்பின் தனது கருத்தையும் கொள்கையையும் மாற்றிக் கொள்ளச் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

2. தங்கள் செயலுக்கு முழுப் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள்

இஸ்ரோவின் தலைவராக இருந்த விக்ரம் சாராபாய், தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளில் தோல்வி ஏற்படும்போது பத்திரிக்கையாளர் முன்பு தான் பொறுப்பெடுத்துக் கொண்டு பதிலளித்ததையும், வெற்றி கண்ட போது தனது குழுவை முன்னிறுத்தியதையும் அப்துல் கலாம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் ஒரு முதிர்ந்த மனிதரின் அடையாளம். அவர்கள் தங்களது செயலுக்கு முழுப் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். அடுத்தவர் மேல் பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளும் குணம் அவர்களிம் அறவே இருக்காது.

3.  வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வார்கள்

முதிர்வது என்பது ஒவ்வொரு விஷயத்தையும் அதனதன் இயல்பில் அப்படியே ஏற்றுக் கொள்வது. நம் எதிர்பார்ப்பின் படி மற்ற மனிதர்கள் அல்லது சூழ்நிலை இல்லாவிட்டாலும் அதற்காக எரிச்சல் படாமல், ஏமாற்றம் கொள்ளாமல் சமநிலையோடு அணுகுதல் தான் முதிர்ச்சி. ஒவ்வொரு மனிதரின் செயல்பாட்டிலும் வேறுபாடுகள் இருக்கதான் செய்யும் என்பதை அறிந்து வைத்திருக்கும் இவர்கள் மற்றவர்களை அவர்கள் குணம்க்களுக்காக வெறுக்காமல் அவர்களை நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வார்கள்.

4. வெட்டி அரட்டைகளில் ஆர்வம் இருக்காது

தங்களது நேரத்தைப் பொதுவாக வெட்டி அரட்டைகளில் மற்றவர் வீணடிக்கும் போது, முதிர்ச்சி பெற்றவர்களால் அதில் கலந்து கொள்ள முடியாது. அவர்களின் மனமானது ஆழ்ந்த அர்த்தம் மிகுந்த உரையாடல்களையே விரும்பும். அது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பற்றிய அனாவசியப் பேச்சை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். உயர்ந்த விஷயங்களை நோக்கிய தேடலுக்காக அவர்கள் நேரத்தை ஒதுக்க விரும்புவார்கள்.

5. தங்களுக்கான எல்லையை வகுத்துக் கொள்வார்கள்

மேற்சொன்ன விஷயங்களைப் பார்க்கும் போது, இவர்களை எளிதில் மற்றவர்கள் காயப்படுத்தலாம் அல்லது உபயோகித்துக் கொள்ளலாம் எனத் தோன்றக் கூடும். ஆனால் முதிர்ந்த மனநிலை கொண்ட ஒருவரால் தனது எல்லைகளையும் சரியான விதத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியும். அவர்களைப் பற்றிய தெளிவு அவர்களிடம் அதிகமாக இருப்பதால், toxic மனிதர்களை அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள், அவர்களை தங்களது எல்லைக்குள் அனுமதிக்கவும் மாட்டார்கள். மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் தங்களது உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.

6. அழுத்தமான சூழ்நிலையைச் சரியாக் கையாளுவார்கள்

தன்னைச் அரியாக அறிந்து வைந்த்திருப்பதாலும், உணர்வு நிலைகளைச் சரியாகக் நிர்வகிப்பதாலும் எந்தவொரு அழுத்தமான சூழலிலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் இடிந்து போய் உட்காரமாட்டார்கள். அழுத்தம் தரக்கூடிய விஷயங்களைப் புறம் தள்ளவும் மாட்டார்கள், அதனை மனத்திற்குள் எப்போதும் போட்டுக் குழப்பிக் கொள்ளவும் மாட்டார்கள். 

கடினமான சூழ்நிலைகளில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, அதனை அதிகப்படியான உணர்வு நிலையில் இருந்து அணுகுவது தான்.  இது அவர்களை அந்தச் சூழலுக்குள் மூழ்கிப் போய்விடச் செய்யும். உணர்ச்சிகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பவர்களால், எளிதில் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். அதனை விட்டு வெளியே வரவும் முடியும்.

7. எளிதில் மன்னிப்பார்கள்

உளவியலில், மன்னித்தல் என்பது மனநலத்திற்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாகப் பார்க்கப் படுகிறது. அடுத்தவரை மன்னிக்கும் நபர், அழுத்தம், கோபம், வெறுப்பு ஆகிய எதிர்மறை உனர்வுகளில் இருந்து தப்பித்து, மகிழ்ச்சி, நிம்மதி போன்ற நேர்மறை உணர்வுகளுக்கு இடமளிக்கிறார். இது ஒருவரது நீண்ட கால மனநலம் மற்றும் உடல் நலத்திற்கு மிக மிக அவசியமாகிறது.

என்றோ நடந்த விஷயங்களை இன்று வரை மன்னிக்க முடியாமல் தினமும் மனத்திற்குள் புழுங்கித் திரியும் மனிதர்கள் மத்தியில், முதிர்ச்சி பெற்றவர்கள் எளிதில் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து மறப்பார்கள். தங்கள் பேரில் தப்பு இருப்பது தெரிந்தால் உடனடியாக மன்னிப்புக் கேட்பதற்கும் தயங்க மாட்டார்கள். விருமாண்டி படத்தில் ஒரு வசனமுண்டு,”மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்; மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுசன்..”. அந்தப் பெரிய மனுசத்தனம் கொண்டவர்களே முதிர்ச்சியடைந்தவர்கள்.

அவரவர் வளர்ந்த சூழலுக்கு ஏற்ப, மனமுதிர்ச்சி அடையக் காலம் எடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதரும் தன்னையும் தன் உணர்வுகளையும் கவனிக்கத் தொடுங்கும் போதே இந்தப் பயணம் விரைவாகும். அந்த முதிர்ந்த நிலையில் தான் வாழ்வின் பல கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்நிலையையை அடைய ஒவ்வொருவரும் தொடர்ந்து முயற்சி செய்வது நல்லது.

- இந்துமதி மனோ

Keywords: Signs of a matured person, Emotional maturity, Traits of a mature individual, Characteristics of maturity, Emotional intelligence, Psychological maturity, Personal growth, Mature personality, How to identify maturity, Qualities of a mature person in Tamil.

    Related Posts

      No Posts Found